நிலம் விற்பனை, சட்டக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி:வக்கீல் உள்பட 2 பேர் கைது
நிலம் விற்பனை, சட்டக்கல்லூரியில் படிக்க சீட் வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.8 லட்சம் மோசடி
சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் ராமகிருஷ்ணன் (வயது 33). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், 'சின்னமனூரை சேர்ந்த சஞ்சீவி மகன் ஜெகன்ராஜ் (39) என்பவர் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள 3 சென்ட் நிலத்தை எனக்கு ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக கூறினார். இதற்காக அவரும், அவருடைய மனைவி ரெஜினா, தாய் முத்துலட்சுமி ஆகியோரும் ரூ.6 லட்சம் என்னிடம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டனர். இதேபோல், திருப்பதியில் உள்ள ஒரு தனியார் சட்டக்கல்லூரியில் எனக்கு சட்டப்படிப்பு படிக்க சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்து விட்டார். என்னிடம் மோசடி செய்த ரூ.8 லட்சத்தை கேட்டபோது அவரும், அவருடைய அலுவலக உதவியாளருமான சின்னமனூரை சேர்ந்த கனி மகன் தமிம் அன்சாரி (28) என்பவரும் கொலை மிரட்டல் விடுத்தனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
2 பேர் கைது
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெகன்ராஜ் வக்கீல் என்பதும், தமிம் அன்சாரி அவருடைய அலுவலக உதவியாளர் என்றும் தெரியவந்தது.
பின்னர் இந்த மோசடி குறித்து ஜெகன்ராஜ், அவருடைய மனைவி ரெஜினா, தாய் முத்துலட்சுமி, தமிம் அன்சாரி ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெகன்ராஜ், தமிம் அன்சாரி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.