கடலூரில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை? போலீசார் விசாரணை
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கடலூர்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த 24 வயது பெண், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர் 2 நாட்கள் கழித்து யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து வாங்குவதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அந்த பெண்ணிடம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர், ஏன் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து சென்றீர்கள். உங்கள் குழந்தை எங்கே? அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தையை கொண்டு வாருங்கள் என்று கூறி உள்ளார்.
ஆனால், அந்த பெண் முன்னுக்கு முன் முரணாக பேசியுள்ளார். பிறகு அந்த குழந்தையை சிதம்பரம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சைல்டு லைன் அமைப்பினர், அந்த குழந்தை பற்றி அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சைல்டு லைன் அமைப்பினர் கடலூர் புதுநகர் போலீசிலும் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் போலீசாரும், அந்த குழந்தையை பணத்திற்காக அந்த பெண் விற்பனை செய்தாரா? அல்லது முறைப்படி தத்து கொடுத்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.