டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய அரசு பஸ்: விளம்பர பலகைகள் மீது மோதி நின்றது

மயிலாடுதுறையில் டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய அரசு பஸ் விளம்பர பலகைகள் மீது மோதி நின்றது.

Update: 2023-01-22 20:48 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை பஸ் நிலையத்துக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று வந்தது.

அதில் இருந்து பயணிகள் இறங்கி சென்ற பின்னர், டிரைவர் பஸ்சின் என்ஜினை நிறுத்தாமல் 'நியூட்ரலில்' வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பஸ் டிரைவர் இல்லாமலேயே தானாக ஓட தொடங்கியது. இதை அங்கிருந்த பயணிகள் உடனடியாக கவனித்து, அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு ஓடிய பஸ் எதிரே இருந்த விளம்பர பலகைகள் மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

அந்த விளம்பர பலகைகள் அங்கிருந்த சுவரில் சாய்ந்து, பஸ்சும் அதன் மீது மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் சேதம் அடைந்தன. பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. பஸ் தானாக ஓடியபோது அங்கிருந்த பயணிகள் சுதாரித்துக்கொண்டு உடனடியாக ஓடிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் பஸ்சுக்குள் பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்துக்கு பிறகு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பஸ்சை மீட்டு பணிமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்