ஆறுமுகநேரியில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு; கலெக்டர் பார்வையிட்டார்
ஆறுமுகநேரியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
விளையாட்டு மைதானம்
ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வந்தார். அங்கு நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பை கிடங்கின் இடத்தை சரிசெய்து பயனுள்ளதாக மாற்றி அமைக்க நகர பஞ்சாயத்து அதிகாரி கணேசன் மற்றும் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
மேலும் அவர் ஆறுமுகநேரி கடலோர போலீஸ் நிலைய சோதனை சாவடி எதிரே உள்ள மத்திய அரசு உப்பு இலாகாவிற்கான இடத்தையும் பார்வையிட்டார். அந்த இடத்தில் ஆறுமுகநேரி சுற்று வட்டார மக்கள் பயன்படும் வகையில் உயர்தர விளையாட்டு மைதானம், பயிற்சி தளம், அமைப்பதற்கு பார்வையிட்டார்.
அவருடன் நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) திருச்செல்வம், நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், பொறியாளர் ஆவுடை பாண்டியன் மற்றும் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.
வடிகால் பணி
ரூ.34 கோடி மதிப்பீட்டில் கடம்பாகுளத்தில் இருந்து ஆத்தூறாங்கால் மற்றும் வரண்டியவேல் கிராமம், தண்ணீர் பந்தல், தலைவன்வடலி வழியாக கடலில் சென்று சேரும் இடம் வரை வடிகால் தூர்வாரும் பணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடையும் நிலையில் நேற்று காலையில் தலைவன்வடலி பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் ஆதிமூலம், ரமேஷ், நவீன் பிரபு மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களிடம் தூர்வாரும் பணிகள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.
ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், முன்னாள் தலைவர் எம்.பி.முருகானந்தம், ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பி.செல்வம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
ஆய்வுக்கூட்டம்
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீர்த்தேக்க தொட்டி
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதையும், நகராட்சி நீரேற்று நிலையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்குட்பட்ட தோப்பூர் நீரேற்று நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சீர்செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோவில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள ஆய்வாளர் அறை, கைதிகள் அறை, ஆயுத அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
ஆய்வின் போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், உதவி பொறியாளர் ஆதிமூலம், சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.