தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2023-06-22 19:47 GMT

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர்மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோழர் அருங்காட்சியகம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சை மேம்பாலம் அருகே, நுகர்பொருள் வாணிக கழக அலுவலகம் அருகே அமைக்கலாம் என இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தை தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின்போது, தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சை பெரியகோவில் அருகே மேம்பாலம் எதிரில் உள்ள இடத்தை கலெக்டர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.

இடம் ஏற்புடையது

இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறை செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இடம் பொருத்தமானதாக இருக்கிறது என எம்.எல்.ஏ.க்களும், மேயரும் தெரிவித்தனர். தஞ்சை மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சியகத்துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது.

மேலும், இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது. இதை மேலும் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்