ஏரியில் மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஆற்காடு அருகே ஏரியில் மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.;
ஆற்காடு அடுத்த சாத்தூர் ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக ஆற்காடு வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சாத்தூர் ஏரிக்குச் சென்றனர். அப்போது அங்கு மண் அள்ளிக்கொண்டு இருந்த நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.