பண்ருட்டி அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்2 பேர் கைது
பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே ஒறையூர் கொய்யாத்தோப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி வாகனங்கள் வந்து செல்வதாகவும், சமூக விரோத செயல் நடப்பதாகவும் புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு அறையில் 35 மூட்டைகளில் புகையிலைப்பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த கொய்யாத்தோப்பை சேர்ந்த கலியபெருமாள் மகன் பிரபாகரன்(வயது 35), பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த முகமது அன்சாரி(50) ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், பெங்களூருவில் இருந்து குளிர்பான பாட்டில்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனத்தில் புகையிலைப்பொருட்களை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து, பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு கார், மோட்டார் சைக்கிளில் சென்று கடைகளில் விற்பனை செய்து வந்ததும், நேற்று புகையிலைப்பொருட்களை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்ல தயாராக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைபொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.