27 சாக்கு மூடைகளில் புகையிலை பறிமுதல்
ராமநாதபுரம் அருகே 27 சாக்கு மூடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ்.மடை அருகே தனியார் பள்ளியை ஒட்டிய கருவேலங்காட்டின் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்த மர்ம நபர்கள் அதில் இருந்த மூடைகளை கீழே கொட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனை கண்ட போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 27 சாக்கு மூடைகள் இருந்துள்ளன. அதனை பிரித்து பார்த்தபோது 18 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதன்மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதனை தொடர்ந்து அந்த புகையிலை பொருட்கள் மூடைகளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.