செங்கோட்டையில் ரூ.41½ லட்சம் திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; தந்தை-மகன் கைது
செங்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.41½ லட்சம் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரிஸ் (திமிங்கல உமிழ்நீர்) கடத்தி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக செங்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில், அச்சன்புதூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாதவன், தனிப்பிரிவு போலீஸ் செந்தில்ரமேஷ், அரவிந்த்ராஜ், விக்னேஷ், மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
செங்கோட்டை விஸ்வநாதபுரம் அருகே மாவடிக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினார்கள். அப்போது, ஒரு அறையில் சிறிய சிறிய துண்டுகளாக திமிங்கல உமிழ்நீர் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அது மொத்தம் 2¾ கிலோ இருந்தது.
தொடர்ந்து 2 ேபரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தங்கச்சன் (வயது 65), அவரது மகன் வர்கீஸ் (35) என்பதும், திமிங்கல உமிழ்நீரை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.41½ லட்சம் ஆகும். கைதான 2 பேரை தவிர இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து செங்கோட்டை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். செங்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.41½ லட்சம் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.