பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
முத்தையாபுரம் பகுதியில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் அருண்குமார் ஆலோசனையின்படி, மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தையாபுரம், ஸ்பிக்நகர் மற்றும் தெர்மல் நகர் பகுதியில் உள்ள 60 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக ரூ.8,200 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.