விற்பனைக்காக வைத்திருந்த யானை தந்தங்கள் பறிமுதல்; 7 பேர் கைது

குமுளி அருகே விற்பனைக்காக யானை தந்தங்கள் வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-16 16:25 GMT

தமிழக எல்லை பகுதியான குமுளியில் சிலர் யானை தந்தம் விற்பனை செய்வதாக மதுரை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், அவர்களிடம் யானை தந்தம் வாங்குவதுபோல் பேசினர். அப்போது அவர்கள் யானை தந்தம் வேண்டும் என்றால் கூடலூர் காப்புக்காடு வனப்பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து அதிகாரிகள் நேற்று அந்தப் பகுதிக்கு சென்றனர்.

அப்போது 2 பேர் யானை தந்தங்களுடன் வந்தனர். அவர்களை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கூடலூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 62), வெள்ளையன் (60) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. யானை தந்தங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, யானை கொல்லப்பட்டு தந்தம் எடுக்கப்பட்டதா?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், கேரள மாநிலம் மட்டம்பாரா பகுதியை சேர்ந்த மேத்யூ ஜான் (53), நிதின் (30), தடியூரைச் சேர்ந்த அசோகன் (50), மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (34), இலக மண் பகுதியை சேர்ந்த ஜான்சன் (51) ஆகிய 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்