இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி

விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகை வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி விழுப்புரத்தில் பரபரப்பு;

Update: 2023-07-10 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10.6.2015 அன்று தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவருடன் வளவனூர் நோக்கிச்சென்றார். அப்போது அதிவேகமாகவும், அஜாக்கிதையாகவும் சென்று நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த முருகன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருத்துவ செலவிற்காக மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் முருகன் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 24.2.2017 அன்று இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட முருகனுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.84,141-ஐ வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அந்த இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் முருகன் சார்பில் வக்கீல் வேலவன் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை இன்சூரன்ஸ் நிறுவனம், முருகனுக்கு வழங்க வேண்டுமென்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யவும் 27.6.2023 அன்று நீதிபதி பிரபாதாமஸ் உத்தரவிட்டார். இருப்பினும் இழப்பீடு தொகையை வழங்காததால் நேற்று விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்த 2 கணினிகள், ஒரு பிரிண்டர் ஆகியவற்றை கோர்ட்டு ஊழியர்கள் ராஜ், பாக்யராஜ் ஆகியோர் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்