அதிபயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்: பலியான ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. திட்டம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் அதிபயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update: 2022-11-01 18:41 GMT

கோவை,

கோவை கோட்டைமேடு ஈஸ் வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் இறந்தார். மேலும் அந்த பகுதியில் ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 27-ந் தேதி முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தனர்.

இந்த எப்.ஐ.ஆர்-ல் கார் வெடித்ததில் இறந்த ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும் பென்டரித்ரிட்டால் டெட் ராநைட்ரேட் (பி.இ.டி.என்) மற்றும் நைட்ரோ கிளிசிரின் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், ரெட் பாஸ்பரஸ் உள்பட 109 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பலத்த சேதத்தை ஏற்படுத்தும்

இதில் பி.இ.டி.என் மற்றும் நைட்ரோ கிளிசிரின் ஆகியவை பலத்த சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இதனை ராணுவத்தினர் மற்றும் சுரங்க தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இதுபோன்ற வெடி மருந்துகளை வாங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகள் உள்ளன. இதனை மீறி ஜமேஷா முபினுக்கு இத்தகைய அதி பயங்கர வெடிபொருட்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேதியியல் துறை வல்லுனர்கள் கூறியதாவது:-

பி.இ.டி.என் பவுடர் மற்றும் திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரின் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் பி.இ.டி.என். டெட்டனேட்டர் தயாரிக்கவும், நைட்ரோ கிளிசரின் ஜெலட்டின் தயாரிக்கவும் பயன்படும் முக்கிய மூலப்பொருட்களாகும். இந்த பொருட்களின் அருகில் சிறு தீப்பொறி ஏற்பட்டால் கூட உடனடியாக தீப்பிடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

சோதனை நடத்த திட்டம்

எனவே இதனை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனை ஆன்லைன் மூலம் வாங்க முடியாது. இதன் அளவு அதிகரிக்கும் போது அதனால் ஏற்படும் சேதமும் அதிகரிக்கும். இதுதவிர ரெட் பாஸ்பரஸ் தீ மளமளவென்று பரவ உதவும் என்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பி.இ.டி.என். வெடி மருந்து பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஜமேஷா முபின் இந்த பயங்கர வெடிபொருட்களை வாங்குவதற்கு வேறு நபர்கள் உதவி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், ஜமேஷா முபின் மற்றும் 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்தவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் அவர்களுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? எல்லாம் செல்போனில் பேசினார்கள் என்கிற விவரத்தை சேகரித்து அவர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்