வீட்டில் பதுக்கிய 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கிய 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
லால்குடி:
ரேஷன் அரிசி பதுக்கல்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மேலத்தெருவில் வசித்து வருபவர் கீர்த்திவாசன்(வயது 26). இவர் அதே தெருவில் சொந்தமாக புண்ணாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எல்.அபிஷேகபுரம் பகுதியில் அவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாக திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து லால்குடி தாசில்தார் சிசிலினாசுகந்தி, வட்ட வழங்கல் அலுவலர்(பொறுப்பு) கார்த்திக், தனி வருவாய் அலுவலர் இளவரசி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், போலீசார் ஆகியோர் அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.
170 மூட்டைகளில்...
இந்த சோதனையில் 170 மூட்டைகளில் 8 டன் ரேஷன் அரிசியை கீர்த்திவாசன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மூட்டைகள், எடைபோடும் எந்திரம் ஆகியவற்றை வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து, திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக் அளித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவான கீர்த்திவாசனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.