வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-13 16:15 GMT

திண்டுக்கல் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை பிடிக்க திண்டுக்கல் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் இன்று மாலையில் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது பிஸ்மி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் ஒரு அறையில் 50 மூட்டைகளில் 750 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்களை வீட்டின் உரிமையாளரான முகமது யூனீஸ் அங்கு பதுக்கி வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், தலைமறைவான வீட்டின் உரிமையாளரை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்