வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.;

Update: 2022-06-02 23:21 GMT

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த பிரியாணி கடையில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 65 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,''கெட்டுப்போன இறைச்சி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த இறைச்சியை அழித்துவிட்டோம். அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தவறான போக்கு. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்'', என்றனர்.

''பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்