கொல்லங்கோடு:
கொல்லங்கோடு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கிராத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நித்திரவிளையில் இருந்து பைபர் படகு ஏற்றிய ஒரு மினி டெம்போ கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீசார் அந்த டெம்போவை நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது டெம்போவில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் வாகனத்தை சோதனை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவை, படகுடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து சோதனையிட்டனர். அப்போது, படகின் உட்பகுதியில் பிளாஸ்டிக் கேன்களில் 560 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து மண்எண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டெம்போ டிரைவர் கேரளாவை சேர்ந்த சுனில் மற்றும் அவருடன் இருந்த 6 மீனவர்களை கைது செய்தனர். மண்எண்ணெய்யை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.