உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 10½ டன் நெல் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 10½ டன் நெல் பறிமுதல்
கபிஸ்தலம்
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனைசாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 10½ டன் நெல்லை பறிமுதல் செய்தனர்.
கொள்முதல் நிலையங்கள் திறப்பு
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களில் இருந்து நெல்மூட்டைகளை வியாபாரிகள் கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாகன தணிக்கை
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு நெல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு வருவதை தடுக்க மாவட்ட எல்லைகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனைசாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில் திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
விசாரணை
அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தது. நெல் மூட்டைகள் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது எனவும், எங்கே கொண்டு செல்லப்படுகிறது எனவும் லாரியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி (வயது22), நாகமங்கலத்தை சேர்ந்த வியாபாரி முருகேசன் (52) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அதிகவிலைக்கு விற்க கொண்டு வந்ததும், உரிய ஆவணங்கள், ரசீதுகள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
10½ டன் நெல் பறிமுதல்
இதையடுத்து 10½ டன் நெல்லை, லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் லாரியில் வந்த டிரைவர் வெற்றி மணி, வியாபாரி முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்காக வியாபாரி கொண்டு வந்தாரா? அல்லது வேறு எங்கே கொண்டு செல்லப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.