பொன்னமராவதியில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
பொன்னமராவதியில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மாம்பழ சீசன்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மா மரங்களை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள். இங்கு விளையும் மாங்காய்களை மொத்தமாக குடோன்களில் பழுக்க வைத்து, பிற மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் சந்தைகள், மார்க்கெட்டுகள், பழக்கடைகளில் மாம்பழம் விற்பனை களைகட்டி வருகின்றன.
இந்தநிலையில், பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பொன்னமராவதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொன்னமராவதி பிரதான சாலையில் உள்ள 2 பழக்கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 1 டன் எடை கொண்ட மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன்குமார், பொன்னமராவதி உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அந்த மாம்பழங்களை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரசாயனம் தடவியோ அல்லது கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், இதனை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.