தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை இணைத்தது எப்படி? என விசாரணை தீவிரம்

தூத்துக்குடியில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை இணைத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கூறினார்.

Update: 2022-11-14 18:45 GMT

தூத்துக்குடியில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை இணைத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கூறினார்.

இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஞ்சா

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குற்ற செயல்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அது போன்ற விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 149 வழக்குகள் பதிவு செய்து, 256 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய், 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் போலீசுக்கு தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இது தொடர்பாக புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

விசாரணை

தூத்துக்குடியில் போலி போதை பொருள் வைத்து இருந்தவர்களிடம் இருந்து 2 வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை கிடைத்து உள்ளதால், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அந்த வாக்கி டாக்கியில் போலீசின் அலைவரிசையை எப்படி இணைத்தார்கள், போலீசாருக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக போலீஸ் தொழில்நுட்ப பிரிவு மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தூத்துக்குடியில் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்