பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 677 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 677 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா, பான் மசாலா, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்கள் ஓசூர் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி, ஓசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி சர்க்கிள் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
புகையிலை பொருட்கள்
இதையடுத்து போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக 677 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ், பான்மசாலா இருந்தது தெரிந்தது. மேலும் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து காரில் வந்த நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர சிங் (வயது 35), படேல்சிங் (21) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரிந்தது.
பறிமுதல்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திர சிங், படேல் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 677 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் இவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.