பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றிச்சென்ற வேன்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றிச்சென்ற வேன்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கோடைவிடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆட்டோ, மினிவேன்களில் சாலை விதிகளை மீறி மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்படுவதை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர். அதன்படி திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல்லில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பள்ளி மாணவ-மாணவிகளை அதிக அளவில் ஏற்றி சென்ற 2 மினிவேன்கள் சிக்கின. மேலும் அந்த மினிவேன்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 2 மினிவேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்கு பணம் ஏற்றி சென்ற 3 வேன்களை மடக்கி ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த 3 வேன்களுக்கும் தகுதி சான்று புதுப்பிக்காதது தெரியவந்தது. இதனால் அந்த 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் திண்டுக்கல்-மதுரை சாலையில் சோதனை நடத்திய போது பாரம் ஏற்றி வந்த லாரிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சேலத்துக்கு அளவுக்கு அதிகமாக உப்பு பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகள் பிடிபட்டன. இதையடுத்து 2 லாரிகள், 3 வேன்கள், 2 மினிவேன்கள் என 7 வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் அந்த வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.