கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.;
பூந்தமல்லி,
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனையகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரசாயன பொடி கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கடைகளிலிருந்து சுமார் 7 டன் மாம்பழங்கள் மற்றும் 1 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை கிருமிநாசினி ஊற்றி அழித்தனர். ரசாயன பொடி கலந்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.