தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
பல்லடம்
பல்லடம் அருகே போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் அந்த பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
தனியார் பள்ளி
பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஸ்காட் சர்வதேச பள்ளி 10.8.2012 அன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியை அப்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார். இந்த பள்ளியில் தொடக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டது. . அதன் பின்னர் பள்ளியில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்போது பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது என்றும், அதனால் நாளை முதல் (இன்று) பள்ளி செயல்படாது என்று மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர் மணிமுத்து மற்றும் போலீசார் பெற்றோர் - பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது:-
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட் பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர்வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் உடனே சேர்க்க இயலாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள்ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடினால் நாங்கள் வேறு நல்ல பள்ளியை தேர்வு செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்களது குழந்தைகளை சேர்க்க இயலும். பள்ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடுவது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும்.
எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன்று ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறோம் குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாகவும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்திடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர் இதையடுத்து 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.