'நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்'

‘நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்’ என்று இக்கரைபோளுவாம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுரை வழங்கினார்.

Update: 2023-05-01 18:45 GMT

கோவை

'நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்' என்று இக்கரைபோளுவாம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுரை வழங்கினார்.

கிராம சபை கூட்டம்

மே தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூர் அருகே இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளாங்காடு சமுதாய நலக்கூடத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

நொய்யல் ஆறு இந்தபகுதியில்தான் உருவாகிறது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

விருது

சுயஉதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கும் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சனூர் ஊராட்சி சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெற்றுள்ளது.

பள்ளி படிப்பு முடிக்கும் குழந்தைகள் கல்லூரி கல்வியை பயின்றால்தான் அவர்களுக்கான சரியான வேலைவாய்பை பெறமுடியும். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கின்றது. புதுமை பெண்கள் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக பயன்படுத்தி குழந்தைகள் உயர்கல்வியை பெற்று சுய வேலைவாய்பை உருவாக்கலாம், உயர்ந்த பணி வாய்ப்பினை பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தணிக்கை அறிக்கை

கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், சுத்தமான குடிநீர் நிலையினை உறுதி செய்தல், தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கபட்டது.

முன்னதாக பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்கள். அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் சிறுவன பொருட்கள் சேகரிப்பு குழுவிற்கு ஊக்கநிதியாக ரூ.2 லட்சத்தை அவர் வழங்கினார்

இதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம், ஊராட்சி செயலாளர் நாகராஜன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) செல்வம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்