சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே நல்லாவூரில் சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பருத்திக்குடி ஊராட்சி நல்லாவூர் கிராமத்தில் சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த ஏப்ரல் 24-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல்,அம்பாள் வீதிஉலா,கரகம், பால்குடம், காவடி விழா உள்ளிட்டவை நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் நாட்டாறு கரையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், நல்லாவூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.