சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே அரையபுரம் சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-24 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே அரையபுரம் சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சீதளாம்பிகை மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலில் 26-ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி பால்குடம் மற்றும் காவடி ஆகியவற்றுடன் தொடங்கியது.

தொடர்ந்து மாரியம்மனுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, மஞ்சள் காப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்

இதனை முன்னிட்டு மேள வாத்தியங்கள் முழங்க காவிரி கரையிலிருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் 16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் பக்தர் ஒருவர் தீ மிதித்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்