பராமரிப்பின்றி காணப்படும் கழிவறைகள் பயன்பாட்டிற்கு வருமா?
பராமரிப்பின்றி காணப்படும் கழிவறைகள் பயன்பாட்டிற்கு வருமா?;
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 கழிவறைகள்
கீழ்வேளுர் தாசில்தார் அலுவலகம் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கீழ்வேளூர் தாலுகா அளவில் 4 வருவாய் வட்டத்திற்குட்பட்ட 55 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தினமும் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் மற்றும் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வருபவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக 2 கழிவறைகள் தனித்தனியாக உள்ளன.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கழிவறைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கழிவறைகள் சிதிலமடைந்து அசுத்தமாக யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வருபவர்கள் அவசரத்திற்கு திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கும் அவலம் உள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.