அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விதை கரும்புகள் வழங்க வேண்டும்

தஞ்சை மாவட்டத்தில் அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வேளாண்மைத்துறை மூலம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அச்சுவெல்லத்துடன் வந்து விவசாயிகள் புகார் அளித்தனர்.

Update: 2023-04-10 18:45 GMT

தஞ்சை மாவட்டத்தில் அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வேளாண்மைத்துறை மூலம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அச்சுவெல்லத்துடன் வந்து விவசாயிகள் புகார் அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

அப்போது தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில், வீரமாங்குடி பகுதியைச் சேர்ந்த அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் மாரியப்பன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

விதை கரும்புகள்

தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி பகுதியில் தயாரிக்கப்படும் அச்சுவெல்லத்துக்கு தமிழக அரசு புவிசார் குறியீடு பெறும் முயற்சியை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். அச்சுவெல்லம் தயாரிக்க பயன்படும் விதை கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே வேளாண்மைத்துறை மூலம் விதை கரும்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரமாங்குடி பகுதியில் அச்சுவெல்லம் இருப்பு வைக்க குடோன் வசதியும், விற்பனை செய்ய ஏதுவாக சந்தை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். வீரமாங்குடி அச்சுவெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் லட்டு, பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்த முன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டா வழங்க வேண்டும்

அருந்ததிய சமுதாய மக்கள், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நாத்திகன் தலைமையில் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அருந்ததிய சமுதாய மக்கள் ஆலமரத்தெருவில் வசித்து வந்தனர். அவர்கள் வசிப்பிடம் ரெயில்வேக்கு சொந்தமானது என கூறி மாற்று இடம் வருவாய்த்துறை சார்பில் நீலகிரி தெற்கு தோட்டம் மானோஜிப்பட்டி கிராமத்தில் 250 பேருக்கு கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அது முதல் அங்கு மக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அதன்பின் உட்பிரிவு செய்து பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், வருவாய் ஆவணங்களில் உரிய போக்குவரத்து திருத்தம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

இதனால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் போது பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளது. எனவே அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட மனைகளுக்கு அம்பேத்கர் நகர் என பெயரிட்டு உட்பிரிவு செய்து பட்டா வழங்கவும், அரசு வருவாய்த்தறை ஆவணங்களில் போக்குவரத்து திருத்தம் செய்யும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்