தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய விதை பரிசோதனை முக்கியம் என்று விதை பரிசோதனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தரமான விதை தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் மார்கழி, தை பட்டங்களில் உளுந்து பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுகிய கால விளைச்சலுடன் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தருவதால் விவசாயிகளுக்கு உளுந்து பயிர் சாகுபடி அதிக முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே இந்த பட்டத்துக்கு உகந்த தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியமாகும்.
உளுந்து பயிரில் வன்பன் 6, 8, 9, 10 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சாகுபடி பருவத்திற்கு ஏற்ற விதையின் ரகம் மற்றும் விதைத்தரம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். தரமான விதைகள் குறைந்தபட்ச முளைப்பு திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற பயிர் விதைகள் இன்றி இருக்க வேண்டும்.
அதிக மகசூல்
தரமான விதைகளை தேர்வு செய்து விதைக்கும் போது விதைக்கான செலவு குறைகிறது. வயல்களில் உகந்த எண்ணிக்கையில் விதைக்கும் போது, பூச்சி மற்றும் நோயில் இருந்து பயிரை பாதுகாப்பதன் மூலம் அதிக மகசூலுடன் கூடிய லாபம் பெறலாம்.
விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் சாகுபடி செய்ய உள்ள உளுந்து பயிர்களில் விதை முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் குறித்து பரிசோதனை செய்து விதைப்பு செய்வது மிக முக்கியமாகும். உளுந்து பயிருக்கு முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் அறிந்து கொள்ள விவசாயிகள் 100 கிராம் விதை மாதிரி எடுத்து தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் தங்கள் முழு முகவரியுடன் விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 மட்டும் பகுப்பாய்வு கட்டணமாக செலுத்தி பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.