பேரி கார்டுகள் வைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை

அரியூர் சாலையில் தொடர் விபத்தை தடுக்க பேரி கார்டுகள் வைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர். வாகன சோதனையும் செய்தனர்.

Update: 2023-04-07 18:22 GMT

வாகன சோதனை

வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்த பள்ளி மாணவி மதுமிதா (வயது 16) என்பவர் தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அரியூர் சாலையில் நடந்து சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார். இதேபோல அரியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை அனிதா என்பவரும் அந்த சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த இரு விபத்துகளும் அரியூர் செல்லும் சாலையில் அருகருகே நிகழ்ந்தது.

எனவே அந்தப் பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு பேரி கார்டுகள் வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனங்களை மறித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரே மோட்டார்சைக்கிளில் 2 இளைஞர்கள் அதிவேகமாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கினர். இளைஞர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியபோது திடீரென மோட்டார்சைக்கிளுடன் அவர்கள் கீழே விழுந்ததனர். பின்னர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மது குடித்திருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். இதேபோல ஓட்டேரி பகுதியிலும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த நடவடிக்கையை வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

போலீசார் கூறுகையில், தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து அரியூர் செல்லும் சாலையில் ஏராளமானவர்கள் அதிவேகமாக செல்கின்றனர். அதை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அங்கு வாகன தணிக்கையையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்