பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்'

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-12 21:07 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிலர் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்பாக கும்பகோணத்தில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடோனுக்கு 'சீல்' வைப்பு

இந்த நிலையில் நேற்று கும்பகோணம் குஞ்சிதபாதம் தெருவில் உள்ள ஒரு குடோனில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குடோனில் ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரி ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாநகர் நல அதிகாரி பிரேமா தலைமையிலான குழுவினர் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அந்த குடோனுக்கு 'சீல்' வைத்தார்.

ரூ.1 லட்சம் அபராதம்

மேலும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

இதுபோல் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் பதிக்க வைத்து விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்