ஆற்றூரில் தி.மு.க. கவுன்சிலர் நடத்திய டாஸ்மாக் பாருக்கு 'சீல்'

ஆற்றூரில் தி.மு.க. கவுன்சிலர் நடத்திய டாஸ்மாக் பார்க்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-06-13 17:06 GMT

திருவட்டார்,

ஆற்றூரில் தி.மு.க. கவுன்சிலர் நடத்திய டாஸ்மாக் பார்க்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

தி.மு.க.கவுன்சிலர்

ஆற்றூர் பேரூராட்சியில் 6-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் பாபு. இவர் ஆற்றூர் சந்திப்பில் அரசு மதுபானக் கடையையொட்டி டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சிசெயல் அலுவலர் மகேஷ்வரன் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அதன் பின்பும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி பேரூராட்சி செயல் மகேஷ்வரன் பாரில் சோதனை நடத்தி மீண்டும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் கொடுத்தார்.

அப்போது பாபு, நோட்டீசை கைப்பற்ற மறுத்ததோடு அபராத தொகையை செலுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.

'சீல்' வைப்பு

இதையடுத்து நேற்று மாலையில் செயல் அலுவலர் மகேஷ்வரன் மீண்டும் பாருக்கு சென்று அபராத தொகை செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், பாபு மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் செயல் அலுவலர் மகேஷ்வரன், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் மற்றும் போலீசார் டாஸ்மாக் பாருக்கு சென்றனர். அங்கு மது குடித்து கொண்டிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு பாருக்கு 'சீல்' வைத்தனர். அப்போது அங்கு கூடிய தி.மு.க.வினர் சிலர் செயல் அலுவலருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஆற்றூர் பேருராட்சியின் அவசர கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் நடத்திய பாரை செயல் அலுவலர் சீல் வைத்தது, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்