அரசின் விதிமுறைகளை மீறும் கல்குவாரிகளுக்கு 'சீல்' ;கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

அரசின் விதிமுறைகளை மீறும் கல்குவாரிகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.

Update: 2023-04-17 18:45 GMT

நாகர்கோவில், 

அரசின் விதிமுறைகளை மீறும் கல்குவாரிகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.

கலெக்டரிடம் மனு

நாம் தமிழர் கட்சி குமரி மண்டல செயலாளர் பெல்வின் ஜோ பால்கன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பத்மநாபபுரம் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளில் அதிக சக்தி வாய்ந்த மின்னணு வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள், பாலங்கள், சாலை போன்றவை சேதமடைகின்றன. தற்போது இயங்கும்கல்குவாரிகள் அரசின் விதிமுறைகளை முற்றிலும் மீறி செயல்படுவதாக தெரிகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் முறையான ஆய்வு நடத்தி மலைகளை முறைகேடாக உடைக்கும் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும். கல்குவாரிகளின் போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விபத்து மரணங்கள் குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்