விதிமுறை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்துக்கு 'சீல்'
ஊட்டியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்துக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்துக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாஸ்டர் பிளான்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர் ஏற்படுவதை தடுக்கவும் மாஸ்டர் பிளான் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது, வீடுக்கு அனுமதி பெற்று விடுதிகளாக மாற்றக்கூடாது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. மேலும் கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, வனத்துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும்.
கடந்த 1993-ம் ஆண்டுக்கு பின்னர் விதிமுறைகளை மீறி 1,337 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பல கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. ஊட்டி கேசினோ சந்திப்பில் விதிமுறை மீறி 3 தளங்களுடன் தனியார் வணிக வளாகம் உள்ளது. தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த வளாகத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக தனியார் வணிக வளாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வணிக வளாகத்துக்கு சீல்
இதுகுறித்து ஊட்டி நகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த மாதம் வணிக வளாகத்தை காலி செய்ய அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை காலி செய்யப்படவில்லை. இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், நகரமைப்பு திட்ட அதிகாரி ஜெயவேல், நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள் வணிக வளாகத்துக்கு சீல் வைக்க சென்றனர். மேலும் வளாகத்தின் 3-வது தளத்தில் உள்ள வழிபாட்டுத்தலத்துக்கும் சீல் வைப்பதாக தகவல் பரவியதால், அங்கு ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தரைத்தளம், முதல் தளத்தில் உள்ள கடைகள், அலுவலகங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்படும். வழிபாட்டுத்தலத்துக்கு சீல் வைக்கமாட்டோம் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் வணிக வளாகத்தின் தரைத்தளம், முதல் தளத்தில் இருந்து கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.