3 மாடி கட்டிடத்துக்கு 'சீல்'

3 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-12-08 20:25 GMT

அனுமதியின்றி 3 மாடி கட்டிடம்

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் ஒரு பழைய வீட்டை மகாலிங்கம் என்பவர் வாங்கினார். பின்னர், அந்த வீட்டை இடித்துவிட்டு, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டிடம் கட்டி வந்தார். ஆனால், அந்த கட்டிடத்துக்கு அவர் திருச்சி மாநகராட்சியில் உரிய கட்டிட அனுமதி பெறவில்லை.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர். ஆனாலும் அவர் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை. இதையடுத்து உரிய அனுமதியின்றி கட்டப்படும் அந்த 3 மாடி கட்டிடத்துக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.

கட்டிடத்துக்கு 'சீல்'

அதன்பேரில் செயற்பொறியாளர் குமரேசன் தலைமையில் மண்டலம்-1 உதவி ஆணையர் ரவி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் வடக்கு ஆண்டார் வீதிக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்தின் தரை தளத்தை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மாநகராட்சி பகுதியில் புதிதாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம் போன்ற கட்டிடம் கட்ட மாநகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி பெற வேண்டும். ஆனால் பலர் கட்டிட அனுமதி பெற்று, அந்த பரப்பளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டி வருகிறார்கள். சிலர் எந்த அனுமதியும் இன்றி கட்டிடங்கள் கட்டுகிறார்கள். அவ்வாறு அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நோட்டீசு வழங்குகிறோம். அப்படியும் அனுமதி பெறாத கட்டிடங்களை 'சீல்' வைக்கிறோம், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்