அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு 'சீல்' வைப்பு

குலசேகரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-09-14 17:52 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக 'சீல்' வைத்தனர்.

கனிமவளம் கடத்தல்

குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொன்மனை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட குலசேகரம் அருகே ஆலம்பிலாவடி பகுதியில் ஒரு கல் குவாரி நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது.

அதிகாரிகள் சோதனை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வேறு இடத்தில் இருந்து கருங்கற்கள் எடுத்து வந்து இங்குள்ள கிரஷர் எந்திரத்தில் வைத்து உடைத்து ஜல்லிகளாக மாற்றி கொண்டு செல்வதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து திருவட்டார் தாசில்தார் தினேஷ், வருவாய் ஆய்வாளர் ரவிநாத், பொன்மனை கிராம நிர்வாக அலுவலர் கவுரிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

குவாரிக்கு சீல் வைப்பு

மேலும், அங்கிருந்து ஜல்லிகளை ஒரு டெம்போ ஏற்றிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தது. உடனே, அதிகாரிகள் அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், கல்குவாரியை பூட்டி சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக கல் குவாரியின் நில உரிமையாளர்களான வேர்க்கிளம்பி காப்புவிளையை சேர்ந்த சுபிஷ், ஸ்பர்ஜன், பெனின் ஆகிய 3 பேர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்