கடலூரில் கடல் சீற்றம்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-12-08 18:45 GMT

வங்கக்கடல் பகுதியில் கடந்த 5-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது.

இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது அபாயத்தை குறிப்பதாகும். அதாவது துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிா்பாா்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

மேலும் புயல் எச்சரிக்கையால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கடலூரில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தை விட கடல் அலைகள் வேகமாக ஆர்ப்பரித்தன. தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கடற்கரையோரம் கருங்கல்லை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.இதனால் நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரமாகவும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே படகுகள் நிறுத்தப்பட்ட இடங்கள் வரை அலைகள் வந்ததால், அதை தாண்டி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்