குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிப்பு

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிக்கிறது. அழிக்கால் கிராமத்தில் புகுந்த கடல்நீர் வடிந்தது.

Update: 2022-07-03 14:32 GMT

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிக்கிறது. அழிக்கால் கிராமத்தில் புகுந்த கடல்நீர் வடிந்தது.

கடல்நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அழிக்கால், கன்னியாகுமரி, மேல்மிடாலம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆக்ரோஷமாக சீறி பாய்ந்தது. இதில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. அப்போது மணலையும் சுருட்டியபடி வீடுகளுக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சில வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரில் வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்கள், சோபாக்கள் மிதந்தன.

ஒரு சில வீடுகள் பாதி அளவு மண்ணுக்குள் புதைந்தன. இதனை தொடர்ந்து மீண்டும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக வீட்டு முன்பு மணல் மூடைகளை அடுக்கி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

விடிய, விடிய தூக்கமின்றி தவிப்பு

அழிக்கால் கிராமத்தில் கடல்நீர் புகுந்ததில் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெருவில் உள்ள 75 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு வசித்த பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு கருதி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அழிக்கால் பகுதி மக்கள் விடிய, விடிய தூக்கமின்றி தவித்தனர்.

கடல் சீற்றம் நீடிப்பு

இந்தநிலையில் ேநற்று 2-வது நாளாக அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம் தொடர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் இருந்ததைவிட நேற்று அலையின் வேகம் சற்று தணிந்து காணப்பட்டது.

அத்துடன் வீடுகளை சூழ்ந்த கடல்நீரை வெளியேற்றும் பணி நடந்தது. இதனால் கடல் நீர் முழுவதுமாக வடிந்தது. மேலும் வீடுகளை சூழ்ந்த மணலை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலமும் மணலை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. வீடுகளில் புகுந்த கடல் நீரால் சேதமடைந்த பொருட்களுடன் சில மீனவர்கள் சோகத்துடன் இருந்ததையும் காண முடிந்தது.

கன்னியாகுமரி

இதேபோல் கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் திடீரென கடல்நீர் மட்டமும் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு இயக்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.

காலை 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. தொடர்ந்து 1 மணி நேரம் கடந்து மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சிறிது நேரம் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் படகுகள் இயக்கப்பட்டாலும் அவ்வப்போது படகு ேபாக்குவரத்து நிறுத்தப்பட்டது. இவ்வாறு நேற்று மொத்தம் 4 மணி ேநரம் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அழிக்கால் பகுதி கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் கேட்டபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது உண்டு. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மேல் மிடாலம் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல அழிக்கால் பகுதியில் கடல் அலை தடுப்புச்சுவர் அமைப்பது பற்றி அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து தடுப்புச்சுவர் அமைப்பதற்கான ஆணை வந்துள்ளது. இருப்பினும் மாநில கடலோர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்குழுவினர் அழிக்கால் பகுதியில் விரைவில் ஆய்வு செய்ய வருவார்கள். அதன்பிறகு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறும். கடல் சீற்றம் ஏற்படும் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்