கடல் சீற்றம், நீரோட்டத்தின் வேகத்தால் வாலிநோக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் புற்கள்

கடல் சீற்றம், நீரோட்டத்தின் வேகத்தால் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் கடல் புற்கள் கரை ஒதுங்கிய காணப்பட்டது.

Update: 2023-04-26 15:28 GMT

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. அதுபோல் இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் இயற்கையாகவே பவளப்பாறைகள், கடல் பசு, டால்பின், உள்ளிட்ட 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர பல வகையான பாசிகளும், கடல் புற்கள் உள்ளிட்ட இயற்கை தாவரங்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் இந்த 21 தீவுகளில் 13 தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள தீவுகள் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் நடுக்கடலில் மூன்று தீவுகள் உள்ளன. இந்த தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் ஏராளமான கடல் பாசிகளும், கடல் புற்களும் மற்றும் பல அரிய கடல் வாழ் உயிரினங்களும் உள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களாக வாலிநோக்கம் கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் கடல் பகுதிகளில் உள்ள ஏராளமான கடல் புற்கள் கடலின் மேல் பகுதிக்கு வந்து கடல் அலை மற்றும் நீரோட்டத்தில் வேகத்தால் கடற்கரையில் முழுவதும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதை தவிர ஓரளவு பாசிகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இந்த கடல் புற்களை கடலில் வாழக்கூடிய ஆவுலியா என்று சொல்லக்கூடிய கடல் பசு விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் புற்களும் குறைவாக இருந்து வரும் நிலையில் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் அந்த புற்களும் தற்போது கரை ஒதுங்கி வருவதுடன் கடலில் உள்ள கடல் புற்களும் அழிந்து வருவதாக கூறப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்