வேதாரண்யத்தில் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

வேதாரண்யத்தில் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது. சேற்றில் படகுகள் சிக்கியதால் மீனவர்கள் அவதிப்பட்டனர்.

Update: 2023-05-11 19:00 GMT

வேதாரண்யத்தில் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது. சேற்றில் படகுகள் சிக்கியதால் மீனவர்கள் அவதிப்பட்டனர்.

கடல் உள்வாங்கியது

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேதாரண்யம் கடற்கரை முழுவதும் சேறு நிறைந்து காணப்பட்டது.

ஆறுகாட்டுத்துறையில் இருந்து வேதாரண்யம் சன்னதி கடற்கரை வரையிலும் சேறு நிறைந்து பல நாட்களாகி விட்டது. அங்கு தற்போது சேறு காய்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் பகுதியில் கடல் திடீரென 100 அடி தூரம் உள்வாங்கியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் சேற்றில் சிக்கின.

மீனவர்கள் அவதி

படகுகளை சேறு இல்லாத கரை பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கு மீனவர்கள் கடும் அவதிப்பட்டனர். டிராக்டர் மூலம் படகுகளை இழுத்து கரைக்கு அப்பால் கொண்டுவந்து நிறுத்தும் பணியில் பெரும்பாலான மீனவர்கள் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும், கடலுக்குள் இருந்து சேறு வெளியே வருவதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் கரையோரம் வலை வைத்து மீன் பிடிக்கும் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'வேதாரண்யத்தில் வழக்கமாக கடல் உள்வாங்கும். பின்பு சகஜ நிலைமைக்கு வரும். இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது 100 அடி தூரம் உள்வாங்கி இருப்பது. இதுபோன்று அதிக தூரத்துக்கு கடல் உள்வாங்குவது அடிக்கடி நிகழாது.

கடல் சீற்றம்

கடலிலில் இருந்து கரைக்கு சேறு தள்ளப்படுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. கடல் அலை இல்லாததால் சேறு முழுவதும் கரை பகுதியில் அப்படியே தேங்கி உள்ளது. புயல் சின்னம் காரணமாக தற்போது கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது.

இதனால் அலை படிப்படிப்பாக அதிகரித்து கரை பகுதியில் தேங்கி உள்ள சேறு கரைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்