விவசாயிக்கு அரிவாள் வெட்டு; முதியவர் கைது
மானூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.;
மானூர்:
மானூர் அருகே உள்ள தென்கலம் புதூரை சேர்ந்தவர் சண்முகநாதன், (வயது 57). விவசாயி. இவரது வீட்டிற்கு பின்புறமுள்ள வீட்டில் காளிதாஸ் (70) என்பவர் வசித்து வருகிறார். மதுப்பழக்கம் உள்ள இருவரும் அடிக்கடி வாய் தகராறு செய்வதும், பின்னர் நட்பு பாராட்டுவதும் வழக்கம். இந்நிலையில் நேற்று தென்கலம் புதூரிலுள்ள பஸ்நிறுத்தத்தில் சண்முகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் அவரிடம் வாக்குவாதம் செய்ததோடு, கையில் இருந்த அரிவாளால் சண்முகநாதனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த சண்முகநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.