தகராறை தட்டிக்கேட்ட தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

குஜிலியம்பாறை அருகே தகராறை தட்டிக்கேட்ட தாய்-மகனை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-20 21:00 GMT

குஜிலியம்பாறை அருகே உள்ள அய்யாக்கண்ணூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் தங்கப்பாண்டியனின் தாய் அம்சவேணி, அண்ணன் வினோத் ஆகியோரும் சென்றிருந்தனர். இதற்கிடையே இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது அதே ஊரை சேர்ந்த நவீன், சகோதரர் பிரவீன் மற்றும் அவர்களது நண்பர் சுரேஷ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த தங்கபாண்டியன், அவரது அண்ணன் வினோத் ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நவீன், பிரவீன், அவர்களது தாய் கவிதா, நண்பர் சுரேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து தங்கப்பாண்டியன் மற்றும் அவரது தாய் அம்சவேணியை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் நவீன், பிரவீன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கப்பாண்டியனை வெட்டினர். இதனை தடுக்க வந்த அம்சவேணிக்கும் வெட்டு விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த தங்கப்பாண்டியன், அம்சவேணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் நவீன், பிரவீன், கவிதா, சுரேஷ் ஆகிய 4 பேர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்