டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனருக்கு அரிவாள் வெட்டு: சென்னையில் ஓடும் பஸ்சில் ரவுடிகள் அட்டூழியம்

சென்னையில் ஓடும் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனருக்கு மர்மநபர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-12 05:44 GMT

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் பயண சீட்டு எடுக்கக் கூறிய அரசு பஸ் நடத்துனரை வெட்டிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் பரப்பில் கூறப்பட்டதாவது:-

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி நேற்று இரவு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பழைய வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் சிக்னல் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, இரு நபர்கள் திடீரென ஏறினர்.

அந்த நபர்களிடம், பஸ் நடத்துநர் சூளைமேடு-ஆத்ரேயபுரம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த த.ஜெகதீசன் (56) என்பவர் பயணச் சீட்டு எடுக்கும்படி கூறினார். அப்போது அவர்கள் இருவரும், எங்களை எப்படி பயணச்சீட்டு எடுக்க கூறலாம் என்று தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஜெகதீசனை வெட்டினர்.

இதை பார்த்த பயணிகள் சத்தமிட்டு அலறினர். உடனே அந்த நபர்கள், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடினர். இச் சம்பவத்தில் காயம் அடைந்த ஜெகதீசன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்