ஏட்டு உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் ஏட்டு உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுெதாடர்பாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ்காரர்
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 30). இவர் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், காளீசுவரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காளீசுவரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காளீசுவரி அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார். அப்போது முத்துக்குமரன் மற்றும் 2 பேர் அங்கு சென்று தகராறு செய்தனர்.
அரிவாள் வெட்டு
அப்போது காளீசுவரியின் உறவினர்களான தூத்துக்குடி மதுவிலக்கு போலீசில் ஏட்டாக பணியாற்றி வரும் கணபதி சுப்பிரமணியன் (48), காவலாளியாக பணியாற்றி வரும் பெரியவிநாயகம் (41) ஆகியோர் சத்தம் போட்டு உள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன் மற்றும் 2 பேர் சேர்ந்து கணபதி சுப்பிரமணியன், பெரியவிநாயகம் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.