கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவியை அரிவாள் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முரளிசங்கர் (வயது 38). அதே கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலன்(33). இவர்கள் 2 பேருக்கும் ஊரில் குப்பை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் மோதி ெகாண்டனர். இதில் வடிவேலன் மற்றும் அவரது உறவினர்கள், முரளிசங்கர், இவரது மனைவி பாக்கியம்மாள் ஆகியோரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலன், கிருஷ்ணன் (30) திம்மப்பன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.