பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவருக்கு வலைவீச்சு
பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகரப்பு. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ராதிகா (வயது 27). இவர், பெரும்பாறை அருகே உள்ள காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். ராதிகாவின் நடத்தையில் சேகரப்புவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை சேகரப்பு பெரும்பாறைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ் ஏறுவதற்காக பெரும்பாறை பஸ் நிறுத்தத்துக்கு ராதிகா நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த சேகரப்பு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராதிகாவை சரமாரியாக வெட்டினார். பின்னர் சேகரப்பு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதிகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ராதிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரப்புவை வலைவீசி தேடி வருகின்றனர்.