சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் உலகம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான்-3 மற்றும் வானவியல் தொடர்பான மாதிரி வடிவங்களை தயார்செய்து, அது தொடர்பாகவும் அறிவியலாளர்களின் சாதனைகள், விண்வெளி சார்ந்த விளக்கங்களை எடுத்துரைக்கும் விதமாகவும் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த கண்காட்சியை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் டாக்டர் நா.எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
நல்ல வாய்ப்பு
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியானது அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கண்காட்சியில் வானவியல் தொடர்பாக காலை மற்றும் மாலையில் தலா 4 நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளன. மேலும் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வான்நோக்கி வாயிலாக வான் செயல்களை பார்வையிடவும் அதுதொடர்பாக விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சந்திரயான் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியலை பற்றி அறிந்திட இந்த கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.