6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவச, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-06-12 17:34 GMT

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் உக்கிரம் குறையவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் இந்த மாதமும் தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதனால் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு 12-ந் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளையும் (புதன்கிழமையும்) பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சுமார் 1½ மாத கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.

அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி ததும்ப உற்சாகமாக வரவேற்றனர்.

உற்சாக வரவேற்பு

வேலூர் தோட்டப்பாளையம் பெண்கள் அரசுப்பள்ளி, கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மாதிரி பெண்கள் அரசுப்பள்ளிகளுக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்தும், பன்னீர் தெளித்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். முதல்நாள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு சந்தித்த மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் கோடை விடுமுறையில் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், சுவாரசியமான நிகழ்வுகள் குறித்தும் பேசி மகிழ்ந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என்று 158 உயர், மேலநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன 6-ம் வகுப்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும் புதிதாக சேர்ந்தனர் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்