பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: காதலன் கைது
காதலை ஏன் துண்டித்தாய் எனக்கூறி பள்ளி மாணவியை விஜய் மிரட்டியுள்ளார்
கடலூர்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் விஜய் (வயது 22). லாரி டிரைவர். இவரும், பிளஸ்-1 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் செல்போனிலும், நேரிலும் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், விஜய் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தது மாணவிக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவருடனான காதலை மாணவி துண்டித்தார். சம்பவத்தன்று விஜய் 50-க்கும் மேற்பட்ட முறை மாணவியின் செல்போனுக்கு போன் செய்தும், மாணவி அந்த போன் அழைப்பை ஏற்று பேசவில்லை.
ஒருகட்டத்தில், மாணவி செல்போனை எடுத்து பேசுகையில், எதிர்முனையில் பேசிய விஜய், இப்படியெல்லாம் காதலை பாதியில் முறித்துக்கொண்டு போக முடியாது. நான் சொல்லும் இடத்திற்கு புறப்பட்டு வா, உன்னுடன் பேச வேண்டும். இல்லையெனில் உன்னுடைய வீட்டுக்கு உன்னை பார்க்க வருவேன் என்று மிரட்டி, நாகம்பந்தல் கிராமத்துக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவி, நாகம்பந்தல் கிராமத்துக்கு சென்றார். அங்கு வந்த காதலன் தனது காதலை ஏன் முறித்தாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மாணவி, தான் வரும் போது கடைத்தெருவில் விஷத்தை வாங்கி குடித்துவிட்டு தான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த விஜய், மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும், இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே சிகிச்சையின் போது மாணவி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் மகளிர் சிறப்பு (போக்சோ) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.